பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...73.

November 13, 2014 at 8:23am

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...73.

இன்று அம்மாவுக்குப் பிறந்த நாள்..இன்னும் நூறு வருஷம் நோய் நொடி எதுவும் இல்லாமல் எப்போதும் சிரித்துக் கொண்டே பாடிக் கொண்டே இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே...அம்மாவுக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்களை சமர்ப்பணம் செய்கிறேன்.தினமும் ஒரு பாடலைப் பின் தொடர்ந்து சென்று கொண்டே இருப்பதால் எப்போதும் அவர் கூடவே இருப்பதாக ஒரு உணர்வோடு வாழ்கிறேன் .ஒவ்வொரு பாடலைப் பின் தொடரும் போது பாடல் முடிந்து ஒரு சில நொடிகளாவது அத்தோடு பயணிப்பது வழக்கம்..அதில் சில பாடல்கள் பின்னால் நாள் கணக்கில் சுத்தி சுத்தி வருவதும் உண்டு...அப்படிப்பட்ட ஒரு பாடல் இன்று அம்மாவின் பிறந்த நாள் பகிர்வு...

கலைவாணி பூலோகத்தை சுற்றிப் பார்க்க வந்தவள்...1935 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று முதல் இங்கேயே அம்மாவாகத் தங்கிவிட்டாள்...நாம் செய்த புண்ணியம் அவருடனேயே வாழ்வது.....அவர் பாடல்களைக் கேட்பது சாக்ஷாத் கலைவாணி அருளாலேயே......அதைக் கேட்கத் தான் முடியுமே தவிரத் திரும்பப் பாட இயலாது....பாடவும் கூடாது...அப்படிப்பட்ட ஒரு தெய்வப் பாடல் இன்றைய பகிர்வு.

1971 இல் வந்த மூன்று தெய்வங்கள் திரைப் படத்தில் கவியரசரின் வார்த்தைகளுக்கு மெல்லிசை மன்னர் இசையமைப்பில் அழகான தர்பாரி கானடா ராகத்தில் அம்மா பாடிய வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் "...இந்தப் பாடலின் சிறப்பே அந்த "தேவி"சங்கதி.எனக்குத் தெரிந்த ஒரு துளி ஞானத்தில் அடித்து சொல்கிறேன்...கர்னாடக சங்கீதத்தைக் கரைத்துக் குடித்த விற்பன்னர்கள் கூட பாட முடியாத சங்கதி....ஆங்கிலத்தில் ஸ்விப்ட் என்று சொல்வார்கள் அது மாதிரி மின்னல் வேகத்தில் நறுக்கென்று தேன் குடுவையை வாயில் கவிழ்த்த மாதிரி.......இனிமை...அவருக்கே அந்தப் பெருமை....

கதையில் மூன்று திருடர்கள் ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்து எப்படி அங்கு உள்ளவர்களுக்கு தெய்வமாகிறார்கள் ....அதில் கதையின் உள்கதையாக நாயகியின் திருமணத்தை நடத்த எப்படி அவர்கள் காரணமாகிறார்கள்?....இதை ஒரு பாடல் காட்சியாக விவரிக்கும் பாடல் இது.நாயகி சந்திரகலா...நாயகன் சிவகுமார்...மூன்று தெய்வங்கள்..நடிகர் திலகம்,முத்துராமன்,நாகேஷ் முறையே திருமால்,சிவன்,ப்ரும்மனாக.....

அவள் கற்பனையில்....அவள் திருமணம் தெய்வத் திருமணம்.."வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகிக் காத்திருந்தாளோ.....தேவி..வைதேகி காத்திருந்தாளோ..."இது பல்லவி...வாத்தியப் பின்னணி எதுவும் இல்லாமல் மென்மையாக வசந்தத்தில் ஓர் நாள் ....என்று துவங்கும் போதே நம்மை மிதிலைக்குக் கூட்டிக் கொண்டு போய் விடுவார்...மணவறை ஓரம்....ஓரமாக நாணி நிற்பதைச் சொல்ல ஓ...ரம்...காத்திருந்தாளோ...தேவி...அந்த தேவியில்தான் என்ன சூட்சமம்.....மூன்று முறை வரும் அந்தப் பல்லவி தேவி...முப்பெரும் தேவியர்தான்...ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி...அருமை..அருமை...அருமை...

"மையிட்ட கண்ணோடு மான் விளையாட....விளையாடவில் ஒரு விளையாட்டு சங்கதி...மௌனத்தில் ஆழ்ந்திருந்தளோ தேவி...

தேவர்கள் யாவரும் திருமணமேடை அமைப்பதைப் பார்த்திருந்தளோ...தேவி..

திருமால் பிரும்மா சிவன் எனும் மூவரும் காவலில் நின்றிர்ந்தாரோ...தேவி....இந்த தேவி சங்கீத வாணி.....அந்த சங்கதி......தெய்வ சங்கதி...கண்மூடி கண் திறப்பதற்குள் சரட் என்று மின்னல் மாதிரி விழும் நேர்த்தி மானுடர்களுக்கு சாத்தியமே இல்லை.....சங்கீதம் இவர் குரலில் சரஸ்வதி வீணை...

"பொன் வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே..

பொங்கும் மகிழ்வோடு மங்கலநாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ..

சீருடன் வந்து சீதனம் தந்து சீதையை வாழ்த்த வந்தாரோ....தேவி...மறுபடியும் மின்னல் கொடியாய் ஸஹஸ்ராஹாரத்தில் தவம் செய்யும் யோகிகளுக்கு அம்பாள் தரிசனம் தருவது போல ஒரு ஷணத்தில் அந்த சங்கதி.....பாடல் முழுவதும் மங்களகரமாய் அம்மாவுடன் பயணிக்கும் நாதஸ்வரம்.......மொத்தத்தில் இதைப் பாடல் என்று சொல்வதற்கு பதில் இசை வேள்வி என்றே சொல்லலாம்....ஒவ்வொரு முறை காணொளியில் இந்தப் பாடல் வரும் போது வேறு எதுவுமே கண்ணுக்குத் தெரியாது.....காது மட்டும் தான் கேட்கும்....நானும் பலமுறை முயன்றிருக்கிறேன்...இன்று இப்போது இந்த நொடி வரை தோல்விதான்...குரலில் அது என்ன மாயக் கவர்ச்சியோ??என்னை அவருக்கு அடிமையாக்கியது இவர் பாடல்கள் என்றால் என்னை அவருடைய பித்தனாக்கியது(பித்தனுக்குப் பெண்பால் தெரியவில்லை)இந்த தேவி சங்கதி.....என் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய...அம்மா....சித்தமெல்லாம் எனக்கு உங்கள் சங்கீதமே....அது தெய்வீகமே......பாடல் உங்களோடு...https://www.youtube.com/watch?v=e2Fod2T0ZDQ