Visali Sriram

November 11, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்.....71.

ஒரு குழந்தைக்காக இந்தப் பாடல் படத்தில்....அந்தக் குழந்தை கூட இப்போது ஒரு அம்மாவாகித் தன் பிள்ளைகளுக்கு இதைப் பாடிக் கொண்டிருப்பாள் .ஆனால் பாடல் இன்றும் புதுப் பொலிவுடன் புத்தம் புது மலராக இனிமை குறையாமல் பின் தொடர வைக்கிறது...1968 ஆம் வருடம் வெளி வந்த திரைப் படம் குழந்தைக்காக..."படத்தில் வந்த தேவன் வந்தான் தேவன் வந்தான் பாடல் மத நல்லிணக்கத்துக்கான தேசிய விருதைக் கவியரசருக்குப் பெற்றுத் தந்தது...இதில் பத்மினி அம்மா அந்தக் குழந்தையைப் பேணிக் காக்கும் ஆயாவாக அற்புதமாக நடித்திருப்பார் மூன்று திருடர்கள் நடுவில்...

அந்தக் குழந்தைக்காக அவர் பாடும் பாடல்"தை மாத மேகம்...அது தரையில் ஆடுது"...கவியரசரின் வரிகளுக்கு மெல்லிசை மன்னர் இசையில் சுசீலாம்மா பாடிய தெய்வீக ராகம்...நான் என் மகளுக்குப் பாடி இப்போது பேரனுக்கும் ஏதோ எனக்குத் தெரிந்த அளவில் பாடிக் கொண்டே இருக்கும் பாடல்..எத்தனை முறை கேட்டிருப்பேனோ எண்ணிக்கை வைக்கவில்லை..

பாடல் துவக்கமே அம்மாவின் மென்மையான அகாரம்...ஆஆஆஆஆ....ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ ஓஹோ.....ஆ ஆ ...அது உச்சத்தில்....ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ .....

அதிலிருந்து இறங்கிப் பாடலுக்கு வரவே மனம் வராத ஆஹா அது..

"தை மாத மேகம் அது தரையில் ஆடுது...தை மாத...இந்தத் தை கொஞ்சம் நீளமான தை...அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது....நிலவே பாடுது...இரண்டாவது வானில் ஒரு பொடி...நிலவே பாடுது...நிலவுக்கு வலிக்காமல் ஒரு அழுத்தம்..

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள் கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாகும்....பூ மாலை வெண்மேகமே...

நட்சத்திரங்கள் வைரம் போல் ஜொலித்தது என்று சொல்லிக் கேட்டிருக்கிறோம்...இப்போது தான் தெரிகிறது முத்து ரதம் ஏறும் நிலவுக்கு இவர்கள் கொட்டிவைத்த வைரங்கள் தாம் நட்சத்திரமாக மின்னுகிறது என்று...குழந்தையிடம் பேசும் போது கொஞ்சம் அதிசயங்களையும் சேர்த்து சொன்னால் அது கண்விரித்து வியந்து புன்னகைக்கும் அழகுக்கு எத்தனை கோடி வைரங்களை வேண்டுமானாலும் அள்ளி வீசலாமே என்று...

"இரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு எல்லோர்க்கும் குலவிளக்கு.....

உயரத்தில் இருந்து உலகத்தைக் காக்கும் கல்யாணத் திருவிளக்கு...

அழுகின்ற குழந்தை ஆடும் கண்காட்சி அம்மா வெண்ணிலவில் அரசாட்சி..

குற்றம் புரிவோரைக் கண்டு கொள்ளும் சாட்சி நல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனசாட்சி"

நிலவைப் பற்றி கவியரசர் பல இடங்களில் பலவிதமாகச சொல்லி இருப்பார்.இங்கு நிலவை கடவுளே ஏற்றி வைத்த குலவிளக்கு என்கிறார்...கல்யாணத் திருவிளக்கு....திருமணங்களில் ஊர்வலத்தில் சுமந்து செல்லும் காஸ் விளக்குகளாக கூட இருக்கலாம்....பிரமிப்புக்காக ..குழந்தைக்காக...

உயரத்தில் இருந்து உலகத்தைக் காக்கும் கல்யாண திருவிளக்கு...உயரத்தில் இதைப் பாடும் போது மேலே...மேல் ஸ்தாயியில் ..

அழுகின்ற குழந்தை காணும் கண்காட்சி அம்மா வெண்ணிலவில் அரசாட்சி....அழுகின்றக் குழந்தைக்குப் பாடுவதனால் இறங்கி கீழே...

அம்மா ....இந்த இடத்தில் அவர் பாடும் போது என்னவோ செய்யும் நமக்கு...அழுகையா...சோகமா...புரியாத ஒன்று...

"குற்றம் புரிவோரைக் கண்டு கொள்ளும் சாட்சி நல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனசாட்சி"...நல்லோர்கள்.......அதைப் பாடி இருக்கும் விதத்தில் இருந்தே...இந்தக் கதையில் ஏதோ ஒன்று புரியும் படி இருக்கும்...

"பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ பாப்பாவைப் படைத்தவன் அவன்தானே...பாப்பாவைப் படைத்தக் கைகளினாலே பால் போல நிலவைப் படைத்தானே....

பாலுக்கு வெண்மை அதன் தூய்மை..அப்படி ஒரு வெள்ளை மனத்தோடு பாப்பாவைப் படைத்த இறைவன் அதன் பிறகு அந்தக் கைகளினால் நிலவைப் படைத்தானாம்...."பிறந்து வந்த போது. நெஞ்சம் திறந்திருந்தது ..அந்தப் பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது"....அது போல குழந்தையாக இருக்கும் வரை மனசில் களங்கமில்லை.....அதை படைத்த பின்பு நிலவைப் படைத்த இந்த உவமை....ஆஹா...

பால் போன்ற....இந்த இடத்தில் தூய்மையாய் ஒரு சங்கதி...

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள் கொட்டி வைத்த வைரம்.......வெண்மேகமே...இத்துடன் பாடல் முடிகிறது....சின்னப் பாடல்...சின்னக் குழந்தைக்காகப் பாடின பாடல் ...அதில் சொல்லிய உவமைகளும் கருத்துக்களும் ஒரு பெரிய பாடலாக்கியது இதை...பாடி இருப்பவரோ குழந்தையோடு ஒன்றி இன்னொரு குழந்தையாக ரசித்து...அதிசயித்து...இனிமை சேர்த்த பாலன்னம்மாக ஊட்டினார் என்றால் மறுக்க முடியாது.....பாடலின் சிறப்பு... பாடியவரின் சிறப்பு.!...தொடர்ந்து கேட்கிறேன்.....உங்களோடு...https://www.youtube.com/watch?v=Wed4jNBQSBs