Visali Sriram

December 6, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...96..

இன்று நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா பிறந்த நாள் .அவருக்காக சுசீலாம்மா பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்...இன்றைய பதிவு ஓர் காவியப் பாடல் என்றே சொல்லலாம்.இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலக்ருஷ்ணனின் கற்பகம் 1963 வெளி வந்தது.இந்தப் படத்தில்தான் கே.ஆர்.விஜயா அறிமுகம்.இந்தப் படத்திற்கான 5 பாடல்களையும் எழுதியவர் வாலி அய்யா அவர்கள்.5 பாடலையும் பாடியவர் சுசீலாம்மா...ஏக போக உரிமை வழங்கி இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர்.2 பாடல்கள் ஏற்கெனவே பகிர்ந்துள்ளேன்...இன்றைய பாடல் படத்தில் சாவித்திரி அம்மா பாடுவது.....எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்....பாடல் அவருக்கு சமர்ப்பணம்...

ரங்காராவ் மகள் கே.ஆர்.விஜயா..ஜெமினியின் மனைவி...அண்ணனின் குழந்தையைத் தன் குழந்தையாக வளர்க்கிறாள்.அவளுடைய அகால மரணத்திற்குப் பிறகு ,ஜெமினியின் தனிமை சிறையை நீக்க ரங்காராவ் தன் நண்பன் நாகய்யாவின் மகளான சாவித்ரியை அவருக்கு மணமுடிக்க எண்ணி அவரை வரவழைக்கிறார்...வந்த சாவித்ரியின் மனதுக்குள் டக்கென்று உட்கார்ந்து கொண்டு விடுகிறார் ஜெமினி.அந்தக் காதலை சாவித்திரி அந்தரங்கமாக அசை போடும் பாடல் இன்றைய பகிர்வு....

பாடல் ஆரம்பமே சாவித்திரி காலால் நிலம் கீறி நாணி,படுக்கையில் புரண்டு கொண்டே 'ஹூம் ஹூம் ஹூம் ஹூம்....ஓஓஹோ ஓஓஹோ ...

ஹம்மிங்....ஆஹா ஓஓஹோ....என்று வாய்விட்டுப் பாடுவதை விட இந்த மனசுக்குள் மணியடிக்கும் ஹம்மிங் கடினமான ஒன்று....அதில் இனிமை மொத்தத்தையும் ஒரு ப்ரெல்யூட் ஆகக் காட்டுவது அம்மாவுக்கு மட்டுமே சாத்தியம்..."பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்..பார்வையிலே படம் புடிச்சான்...

பார்வையிலே படம் புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்..."....இது பல்லவி..பார்வையிலே...பா..ஆ..ஆ..ர்வையிலே படம் புடிச்சான்...பார்வை அப்படி ஒரு தீட்சண்யமான எக்ஸ்ரே பார்வை...படம் புடிச்சு....சு....இங்கு ஒரு ரவை சங்கதி....சொதப்பினால் பொடி ஆகியிருக்கும்...அம்மாவுக்கு மட்டும் அது புடிச்ச லட்டுவாக வந்து விழும்....

பருவ மச்சான்....மச்சானுக்கு ஒரு அழுத்தம் கொடுக்க...சா ஆ ஆ ன்....

இதைத் தொடர்ந்து வரும் சிதார் அருமை..

"மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் பிடிச்சான்..

மரிக்கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழி மறிச்சான்...

மாந்தோப்பில் வழி மறிச்சு...மயக்கத்தையே வரவழைச்சான்....".

சரணம் ஆரம்பமே செம பிட்சிங்....உச்சத்தில்....மனசுக்குள்ளே புகுந்து என்னைப் பிடித்து ஓட்ட....ஆட்ட...தேரின் உவமை....தேர் என்றால் வடம் வேண்டுமே....அதை மைவிழியில் வடமாகப் பிடிச்சானாம்..வாலியின் உவமையே உவமை....'தேரோட்ட"...இதை தேரோட்ட அ அ அ ....என்று இழுத்துப் பிரித்துப் பாடி இருக்கும் நயம்.....தேரோட்டத்துக்கு ஒரு முன்னோட்டம்...மை விழியில்.....இங்கு மையில் அழுத்தம்....சாவித்திரி அம்மாவும் மை விழிகள் காட்ட அந்த அழுத்தத்தின் காரணம் புரியும்....நீட்டிய மை விழிகள்....வடம் புடிச்சான்....புடிச்சான்.....கிராமத்து சொல்வழக்கு.....பிடித்தான் என்று சொல்லியிருந்தால் நயம் கொஞ்சம் குறைந்து தான் போயிருக்கும்...

"மரிக் கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழிமறிச்சான்...

மாந்தோப்பில் வழி மறிச்சு மயக்கத்தையே வரவழைச்சான்"...

அவளை மாந்தோப்பில் வழிமறிச்சு ஒரு வித மயக்கத்தையே அளித்தானாம்...."மயக்கத்தையே"...இதைப் பாடி இருக்கும் விதத்தில் ஒரு கிறக்கத்தை உணரமுடியும்...அப்படி ஒரு குரலில் பாவம்...

"தைமாசம் தாலி கட்ட மார்கழியில் கையைப் புடிச்சான்..

யமுனையிலே வெள்ளம் இல்லை விடியும் வரைக் கதைப் படிச்சான்..

விடியும் வரைக் கதைப் படிச்சு முடிக்காம முடிச்சு வெச்சான்....."

இது அவளுடைய கற்பனை என்று விரசம் கொஞ்சம் தூக்கலாக வைத்தார் போலும் கவிஞர்..

வரிகளின் வலிமையைக் குரலினிமையால் அடக்கி விடுவார்கள் சுசீலாம்மா...தாலி கட்ட..அ.அ.அ.அ....என்று நீட்டி இன்னும் காலம் இருக்கிறது அதற்கு என்று பாடி....மார்கழியில் 'கையப் புடிச்சான்"..கையை வெடுக்கென்று பாடி,.. கையை எதிர்பாராமல் டக்கென்று பிடித்த மாதிரி அதற்கு சாவித்திரி ஒரு அசைவு கொடுத்திருப்பார்...ஆஹா...

விடியும் வரைக் கதை படிச்சு.."முடிக்காம முடிச்சு வெச்சான்..."

.

"...முடிக்காம இந்த இடத்தில் ஒரு சலிப்பு...இன்னும் பாக்கி இருக்கு என்று சொல்வது போல ஒரு இழுப்பு.....குரலில் அம்மாவும்....காட்சியில் நாணத்தோடு சாவித்ரி அம்மாவும்.....எதை சொல்ல எதை விட...

தொடரும் ஒரு தெய்வீக ஆஹா ஹா அதை அப்படியே விசிலில்....ஓஹோ ஹோ....விசில்...ஆஹா ஹா ஹூம் ஹூம்....

'ஊரெல்லாம் உறங்கிவிடும் உள்ளம் மட்டும் உறங்காது

ஓசையெல்லாம் அடங்கிவிடும் ஆசை மட்டும் அடங்காது..

ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நினைத்திருக்கும்..."

அவன் வந்து இவள் நெஞ்சுக்குள் புகைப்படமாய் ஒட்டிக் கொண்டதால் விளைவு...உறக்கம் போச்சு...பூ உறங்குது,பொழுதும் உறங்குது..மான்,மயில்,மனித இனமே உறங்கும் இரவில் இவள் இமைகள் மட்டும் மூட மறுக்கிறது...உறங்காத விழியிரண்டும்....கனக்கும் உள்ளமும் சொல்லும் காரணம் ஆசை....அவனோடு சேரும் ஆசை....அந்த ஆசை எப்போதும் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் காதல் ஆசை....

ஊரெல்லாம்....ஊரில் உள்ள எல்லாம் உறங்கிவிட்டதை சொல்வதற்காக..'ஊ ரெல்லாம்..."உறங்கி விடும்.ம்.ம்.ம்.....

உள்ளம் மட்டும் உறங்காது....கா...து.....நிச்சயமாய்...உறங்காது....அடித்துச் சொல்வதற்காக அந்த இடைவெளி...அடங்கிவிடும்....ஒரு மென்மை...மௌனத்தை விளக்கிச் சொல்ல....

ஆசை மட்டும் அடங்காது....ஒரு தீர்மானம் அடங்காது....

அவனை மட்டும் நினைத்திருப்பேன்....நினைத்திருப்பேன்...இருப்பேனில் ஒரு உறுதி...பே...ன்....

ஆஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஓஹோஹோ ஹோ ஓ ஓ .....

பாடல் முழுக்க எங்கெல்லாமோ சுற்றி வந்த களைப்பு...சந்தோஷத்தில் சாவித்திரி படுத்து உறங்க பாடல் நிறைவு பெறுகிறது...

பாடல் முழுவதும் சாவித்ரியின் அழகு முகம் நீள் திலகம்,ஈரமான உதடுகள்..படுக்கையில் அவர் கவிழ்ந்து படுத்துக் கொண்டு தண்டைக் கொலுசு,கை விரல்களால் போடும் தாளம்....இவையெல்லாம் கண்முன்னே திரைப் படமாய்....கண்ணில் கசியும் ஈரத்துடன்...

செவியெல்லாம் சுசீலாம்மாவின் அந்த ரேஞ்ச்...யாருமே எட்டிப் பிடிக்க முடியாத அந்த சுருதி...அதன் சுத்தம்....அவரின் குரல் தரும் பாவம்....பாலோடு தேன் கலந்த சுவையாய்.....பாடல் உங்களுடன்...https://www.youtube.com/watch?v=0tjaE1I7h7A