Visali Sriram

December 1, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்....91.

இத்தனை நாளாய் பிறகுப் பதியலாம் பதியலாம் என்று வாயில் அடக்கி வைத்துள்ள இனிப்புப் பண்டம் போன்ற ஒரு பாடல்.இனிமேலும் அடக்கி வைத்திருந்தால் பகிர ஒன்றுமே இருக்காது என்ற அளவிற்கு என்னுள் கசிந்து உருகி ஒடிய பாடல் இன்று உங்களுடன்.....

காலத்தை வென்ற கர்ணன்.....மறு பதிப்பின் வெற்றி நாமறிந்ததே...

படத்தின் பிரும்மாண்டம்,பந்துலு மாமா,நடிகர் திலகம்,நடிகையர் திலகம்,தேவிகா..என்.டி.ஆர்...இன்னும் பல தேர்ந்த நடிகர்கள் குழாம்,கவியரசர் கண்ணதாசன்.....மெல்லிசை மன்னர்கள்....வெற்றிக்கு வித்திட்ட வித்தகர்கள்....பாடல்கள் எல்லாம் சாமவேதம்.......அத்துணை சிறப்பு வாய்ந்தவை...அமரகீதங்கள்.இன்றைய பகிர்வு ஒரு கோரஸ் பாடல்...எத்தனைத் துணைக் குரல்கள் இருந்தாலும் ஒரு தனிக் குரல் குயில் குரல் சுசீலாம்மாவின் கண்கள் எங்கே....நெஞ்சமும் எங்கே..."

மறக்கவே முடியாத நடிகர் திலகம்...மறுக்கவே முடியாத அழகி தேவிகா

தீந்தமிழில் கவியரசரின் செந்தமிழ் சந்தம்

சுத்தமான சுத்ததன்யாசி..சுருதி சுத்தமான சுசீலாம்மா

அத்தனையும் மொத்தமாகத் தேனுடன் கலந்த பலாவாகத் தந்த மெல்லிசைமன்னர்கள்......

பின்னணி இசையில் முன்னணியில் சாரங்கி,தில்ரூபா,டோலக்,தபலா,புல்லாங்குழல்....வயலின்கள்...பொறுக்கி எடுத்துக் கோர்த்த முத்துக்களாய்...

தறிகெட்டு ஓடும் குதிரைகள் ,தேரில் அழகி ....காப்பாற்றும் நடிகர்திலகம்....தான் யாரென்று நெற்றியில் ஒரு கோடு திலகமாய்,கையில் ஒரு குன்று,கீழே சந்திரப் பிறை.....இந்த அடையாளம் காட்டி விட்டு மறையும் தேவிகா....அது என்ன என்று புரியாமல் நடிகர் திலகம் இங்கு குழம்ப....அங்கு தேவிகா அரண்மனையில் மனதில் உள்ள கர்ணனை சித்திரமாக வரைந்து அந்தப் புரத்தில் அந்தரங்கம் பகர்கிறார் அவர் காதலை மெல்ல...'கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே....'கண்ட போதே சென்றன அங்கே..

கால்கள் நிலம் கீற.."கால்கள் எங்கே மேனியும் இங்கே

காவல் இன்றி வந்தன இங்கே...ஆ ஆ ஆ ஆ ஆ....

பாடல் முழுவதுமே மேல் சஞ்சாரம் அதிகமாயுள்ள பாடல்...சுருதி சுத்தமாக அந்த சஞ்சாரத்தில் அனாயாசமாக இனிமையோடு உலாவரும் பூந்தென்றலாய் சுசீலாம்மா...நெஞ்சமும் அங்கே......கொஞ்சம் இடைவெளி..கண்ட போதே...போதே....முடிவாக சொல்லும் காதல் அறிவிப்பு..கண்டதுமே....காதல்...இனிமையோ இனிமை...

கால்கள் எங்கே...மேனியும் இங்கே...காவல் இன்றி.......காவலில் ஒரு டேக் ஆப் ....ஆஹா...சென்றன அங்கே......தொடரும் ஆ ஆ ஆ ........ஆஹாஹா....

இங்கு வந்து இணைந்து கொள்ளும் தோழியர் கூட்டம் கோரஸாக.....அவள் தனிமை போனாலும் இனிமை குறையாமல் கோரசுடன் இணைந்து இசைக்கும் இசைக்குயில்....எத்தனை குரல் இணைந்தாலும் இந்தக் குரல் மட்டும் தனியாக....தன்மையாக....தண்மையாக......

தொடரும் ஷெனாய்....இந்தப் படம் முழுவதும் இதன் ஆக்கிரமிப்பு பிரமிப்பு....

தோழியுடன் பகிரும் காதல் சரணம்.."மணி கொண்ட சரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்...அனல் கொண்டு வெடிக்கும்"...காதலின் வெம்மை ...

"மலர் போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும்..."அந்தப் பருவத்தின் துடிப்பு அது..."துடிக்கும்"...பாடி இருக்கும் விதத்தில்l

அதைப் புரிந்து கொள்ளலாம் அதுதான் அம்மாவின் சிறப்பு...

"துணைகொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்"...அவனின்றி ....இங்கு தேவிகாவின் கண்கள் 'அவனைக்' குறிப்பது அழகு என்றால் அம்மா 'அவனின்றி' ....இதைப் பாடி இருப்பது அம்சம்...

"துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்?".....ஏனிந்த மயக்கம்...மயக்கத்தில் ஒரு மயக்கம் என்றால் அந்த ஸ்தாயியிலும் அப்படி துல்லியமாக அந்த சாரீரம் ஒத்துழைக்கும் அதிசயம் ஆனந்தம்...தொடரும் கோரஸ்....

அடுத்த சரணம் பகிர்வதற்கு முன் அந்த பிஜிஎம்மைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.....அந்த தந்தி வாத்தியத்தின் இசை...அந்த இசையின் ரிதத்திற்கு ஏற்றவாறு படிகளில் மான் போல் துள்ளி வரும் தேவிகா....அவருக்காக அந்த பிஜிஎம்மா...இல்லை அந்த பிஜிஎம்முக்காக அவரா என்று இன்று வரை புரியாத புதினம்...மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் அது...

"இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்..

ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்..

கொடைகொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்

குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்."...

அவனைக் கண்டவுடன் என்னைப் பறி கொடுத்து விட்டேன் அவனிடம்..

அவன் என்னைக் காப்பாற்றிவிட்டு வீரம் சற்றும் குறையாமல் ஒரு மதயானையைப் போல் சென்று விட்டான்...நான் என்னை அவனிடம் பறி கொடுத்து விட்டு என்னில் பாதியை இழந்து விட்டு இங்கு மெலிந்து நிற்கிறேன்....'குறை கொண்ட உடலோடு......கண்ணதாசனின் சொல்லாடலே சொல்லாடல்...

இனமென்ன..குலமென்ன....மெல்லினம் அம்மாவிடம் பெருமை பெறுகிறது...

தமிழ் உச்சரிப்பு...இனிமையோடு சேர்ந்து வரும் பொழுது இத்தனை அழகா??

'எனை அங்கு கொடுத்தேன்.'.....'தேனில்' என்னையே நான் இழந்தேன்...மலைத்தேன்.....தொடர்ந்தேன்......இன்றுவரை திரும்பாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் உங்களோடு...

மதயானை...கொஞ்சம் பயம்தான்...ஆனால் அதைக் கூட இனிமையோடு பாடினால் பயம் இல்லை ஜெயம்தான்...உயிர் கொண்டு நடந்தான்...வீரத்தை கவியரசரைத் தவிர வேறு யாரால் இத்தனை கம்பீரமாகச் சொல்ல இயலும்...

உயிர் கொண்டு நடந்தான்.....அந்த இடத்தில் பாடி இருப்பது பற்றிச் சொல்வது கடினம்தான்...உயிருள்ள இடம்..

நானிங்கு மெலிந்தேன்....நானிங்கு ...நான் இங்கு...நானில் இழுத்துவிடும் நாண் ......மெலிந்தேன்...மென்மையான மெலிவு அது......ஆ ஆ ஆ .....

கண்கள் எங்கே..ஏ..ஏ...ஏ....ஏ....எங்கே....என்று நிறுத்துமிடம் இது....இதைக் கேட்கணும் ...எழுதப்டாது....(வடிவேல் ஸ்டைலில்)..

பாடல் முழுவதும் தேவிகாவின் கொள்ளை அழகு கொள்ளை(மனதை)கொள்ளும் அழகு...தேவிகாவின் தோழியாகப் பழம் பெரும் குணச்சித்திர நடிகை ஜி.சகுந்தலா...மெல்லிசைமன்னர்களின் தேவகானம்....கானத்திற்கு மயில்பீலி மூட்டையின் மெல்லிதான கனம் சேர்த்திருக்கும் சுசீலாம்மா.....பாடல் உங்களுடன்.... ..https://www.youtube.com/watch?v=67Xvl_2dZwQ.

NB..இரண்டு 'நிஷாத "பிரயோகமும் இருப்பதால் சிலர் இதை 'உதயரவிச்சந்திரிகா"என்றும் சொல்கிறார்கள்...ஆனால் சுத்த தன்யாசி சாயலே அதிகம் என்பது என் கருத்து....