பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...89.

இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் பிரமாதம்.படம் அற்புதம்.இயக்கம் சொல்லவே வேண்டாம்.சிகரம்..வரிகள் கவியரசர்.இசை மெல்லிசை மன்னர்.பாடி இருப்பது சுசீலாம்மா....இதில் ஒரு தனி சிறப்பு தாய் மகள் இருவருக்கும் அவர்களே பாடி இருக்கிறார்கள்.தாய்க்குப் பாடும் பொழுது வெடிக்கும் பாசம்...மகளுக்குப் பாடும் பொழுது துடிக்கும் தாபம்....வேறு எந்தப் பாடகியாலும் இத்தனை துல்லியமாக உணர்ச்சிகளை வேறு படுத்தி இனிமை குறையாமல் பாட முடியாது என்று அடித்துச் சொல்லுவேன் நான்.

காதலித்தவனை மணமுடிக்க முடியாத தாய்...மணப்பது ஒரு அயோக்கியனை...அவனுக்குக் கட்டிலில் இடம் கொடுத்து,தொட்டிலுக்கு அவனுக்கு

விலையும் கொடுக்கிறாள்.பிறந்ததோ பெண் குழந்தை ...அவள் இருக்கும் இடத்தில்

பாதுகாப்பு?

அது கிடைக்காத நேரத்தில் பழைய காதலனைக் காண நேர்கிறது.குழந்தையை அவன் வளர்க்க ஏற்கிறான்.மகளும் வளர்கிறாள்...வக்கீலுக்குப் படிக்கிறாள் திருமணமும் நிச்சயமாகிறது...ஆனாலும் அவள் மனதுக்குள் தாயைக் காணும் ஆவல் எப்போதும்....

வீட்டில் நடக்கும் ஒரு விருந்துக்கு,மகளை மறைந்திருந்து பார்க்கத் தாயை பழைய காதலன் அழைக்க.. (தன வீட்டு மாடியில் மறைந்து )கீழே நடக்கும் விசேஷத்தைப் பார்க்க ஏற்பாடு செய்கிறான்...விருந்தில் மகள் பாடுகிறாள்.                 

.தாயைப் பற்றிய பாடல் அது....அவள் கனவில் வந்த தாய் பற்றிய பாடல்...மேலே இருக்கும் தாயும் கேட்கிறாள்....

பாடல் இதோ...

"ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு

கனவினிலே என் தாய் வந்தாள் ..கண்ணா சுகமா

க்ருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல் என்றாள்..கண்மணி சுகமா சொல் என்றாள்"..இது மகள் பாடும் பல்லவி....மகளின் பெயர் படத்தில் க்ருஷ்ணா....

கனவினிலே வந்த தாய்த் தன்னை கண்ணா சுகமா...க்ருஷ்ணா சுகமா என்று சொல்லும் மகள்....அதை எப்படி இசையோடு சொல்வது....வரிகளில் அழுத்தமாக கவியரசர் பதிய,மெல்லிசை மன்னர் அந்த ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு மரியாதை கொடுத்து இசை கூட்ட சுசீலாம்மா சுகமா....கண்மணி,க்ருஷ்ணா...சொல்....இதில் பாசத்தைக் கொட்டி,தாயன்பை வாரி இறைத்து 'சொல்"..அந்த ஒத்தைச் சொல்லில் முழு அழுத்தத்தையும் கொடுத்து இசைப் பிரவாகமாக ஓட விட்டிருப்பார்...கேட்கும் நமக்குள் ஒரு ஜெர்க்...அதிர்வு....என்ன ஆகும்?ஒரு அவசரம்...நமக்கு...மகள் கனவில் என்ன பார்த்தாளோ!அவளே சொல்கிறாள்...

"குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு

குழப்பம் மிதந்தது கண்களிலே..

தங்கம் போன்ற இதழ்களிலே

தயக்கம் பிறந்தது வார்த்தையிலே....தயக்கம் பிறந்தது வார்த்தையிலே...."

அம்மாவின் நெற்றியில் இருந்த குங்குமம் அவள் சுமங்கலி என்று காட்டியது.குளம் கட்டிய நீருடன் கூடிய அவள் கண்களில் ஏதோ ஒரு குழப்பம் இருந்தது..நல்ல அழகி அம்மா..தங்கம் போல மின்னிய அவள் உதடுகள் சொல்ல வந்த வார்த்தையில் ஒரு தயக்கம் புரிந்தது எனக்கு...

நான் கேட்டேன்...என்ன கேட்டாள்..."என்னுயிர் தாயே நீயும் சுகமா இருப்பது எங்கே சொல் என்றேன்...அன்னை முகமோ காண்பது நிஜமோ கனவோ நனவோ சொல் என்றேன்..."நானும் நீ எங்கே இருக்கிறாய் அம்மா நான் காண்பது கனவா இல்லை நலமா என்று கேட்டே விட்டேன் என்கிறாள் ...காட்சியின் அழுத்தத்தை பின்னணி ஷெனாயும்,சிதாரும் சொல்லும்...

குங்குமம் ...இந்த வரிகள் ஆரம்பிக்கும் பிட்சிங் .....உச்சம்...குழப்பம் ,கண்களில்.....பாடும் போதே உணரமுடியும்....தயக்கம் பிறந்தது வார்த்தையிலே......தயக்கத்தை தயக்கத்துடன் பாடி இருப்பார்கள்..

என்னுயிர் தாயே நீயும் சுகமா.....அந்த ஸ்தாயியின் உச்சம் மாடி மேல் இருக்கும் அம்மா கேட்பதற்கு....மெல்லிசை மன்னர்...:..கனவோ நனவோ சொல் என்றேன்....கனவோ....நனவோ.....இந்த இடத்தை வேறு யார் பாட நினைத்தாலும் அது கனவே....நனவில் சாத்தியமே இல்லை....மகள் நிறுத்த...

கனவோ நனவோ சொல் என்றேன்....மகள் பாடி நிறுத்த..

மாடியில் பார்த்துக் கொண்டிருந்த தாய் தன் நிலை மறந்து "கண்ணா சுகமா..கிருஷ்ணா சுகமா என் கண்மணி சுகமா சொல் என்றேன்"....பாடி விட...ஒரு நிமிடம் மௌனம்...கீழே மகள் ஒரு பதட்டம்...அருகில் இருக்கும் ஜெமினியிடம்....சித்தப்பா பாடறது யாரு?..கேட்க....ஜெமினி ரேடியோ பாடுவதாக சொல்லி....நிறுத்திவிடக் கிளம்ப...மறுக்கிறாள் மகள்...பாடல் தொடர்கிறது..அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் விடை சொல்வதாக...

"வானத்தில் இருந்து பாடுகிறேன்...எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்...

மகளே வாழ் என வாழ்த்துகிறேன் நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்...மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்...மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்....."பாடி நிறுத்தி மகள் தேடி வரு முன் இடத்தை விட்டு நகர்கிறாள்.காலில் செருப்பைக் கூட போட மறந்து.....

காட்சியின் கனம் கானத்தில் ..இயக்குனர் சிகரம் தன திரைப் படங்களில் பாடல் காட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவார்...அதுவே கதையின் க்ளைமேக்ஸ்....ஆன்டி க்ளைமேக்ஸை...ஏன் திரைக் கதையைக் கூட கோடு கிழித்துக் காட்டும் ......பாடலாசிரியர் ,இசையமைப் பாளர் இவர்களை வைத்துக் கொண்டு காட்சியை விவரிப்பார்....கவியரசருக்கும் மெல்லிசைமன்னருக்கும் ஒரு வரி போதாதா....பல அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் அமைந்தது இத்தகைய டீம் வொர்க்கால்தான்.....பாடுவதற்கு ஒரு சுசீலாம்மா இருந்தால் அதைவிட வேறென்ன வேண்டும்.....பாடல் பிறக்கும்...நாம் கேட்டுக் கொண்டே பின் தொடர வேண்டியதுதான்...

தாய் பாடுவதும் சுசீலாம்மாவேதான்

பாடி இருக்கிறார்....வித்தியாசம் எப்படிக் காண்பித்திருக்கிறார்???குரலில் உள்ள ஒரு நெகிழ்ச்சியில்....வானத்தில் இருந்து பாடுகிறேன்...(வானொலி பாடுவதாக ஜெமினி சொன்னதற்கு நீதி வழங்கினதாயும் ஆயிற்று)...நீ எட்ட முடியாத உயரத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்...எந்தெந்த வழிகள் உண்டோ அங்கெல்லாம் உன்னைத் தேடுகிறேன்....நீ எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்திக் கொண்டுதான் இருக்கிறேன்...எனக்கு மறு பிறவி என்று இருக்குமானால் உன்னை வந்து சந்திக்கிறேன்.சேர்ந்து வாழலாம் என்று பாடி முடித்து வந்த சுவடு தெரியாமல் நகர்கிறாள்.....காலணியை மறந்து சுவடாக நிற்பதைக் கவனியாமல்.....இது ஒரு டயரக்டோரியல் டச்...இயக்குனர் சிகரம் பஞ்ச்.....பாடலின் தரம் காலத்துக்கும் நிரந்தரம் என்றால்...சௌகார் அம்மாவின் நடிப்பு தனி தரம்....இந்த திரைப் படத்தின் தாக்கம் 44 வருடங்கள் ஆகியும் இன்னும் என் மனத்தில் பசு மரத்து ஆணியாய்......ஒரு பூரணமான திரைப்படம்....கதை(தழுவியது என்றாலும்)திரைக் கதை,இயக்கம்,பாடல்,இசை,ஜெமினி சார்..சௌகார் அம்மா...எம் ஆர் ஆர் வாசு..(10 எம் ஆர் ராதா)...

இருவருக்கும் ஒருவரே பாடுவது சுசீலாம்மாவுக்கு பெரிய விஷயமே இல்லை ...இதில் தாயும் மகளும்.....அம்மாவைத் தவிர யார் பாடி இருந்தாலும் இந்த தரம் வந்திருப்பது கடினமே...

உச்சத்திலும் கீழேயும் ஒரே இனிமையுடன்....ஒரு இளம் தென்றலாய்...வேகமான காற்றாய்....மழை நீரோடு வரும் தூவானமாய்......எத்தனை ஜாலம் அந்தக் குரலில்......உருக்குகிறது...வருடுகிறது,கெஞ்சுகிறது...கொஞ்சுகிறது...அழுகிறது,,சிரிக்கிறது......உணர்ச்சிப் பிரவாகமாய் அருவியாய்,நதியாய்,ஓடையாய்...ஊற்றாய்...கசியும் துளி நீராய்.......சொட்டும் தேனாய்.........அம்மா...ஆஹா....

பாடல்......இந்தப் பாடல் அமைக்கப் பட்டிருக்கும் ராகம் கர்நாடக சங்கீதத்தில் 'சுமனஸரஞ்சனி.'..ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் 'மதுகௌன்ஸ்.....https://www.youtube.com/watch?v=tGwtoZtTleo