Visali Sriram

November 26, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...86.

தொடர்ந்தே சென்று கொண்டிருக்கும் நான் சில பாடல்களோடு பயணிக்கும் பொழுது ஹாயாக சிரித்துக் கொண்டும்,உற்சாகத்தோடும் பயணிக்கும் அதே வேளையில் சில பாடல்களில் விக்கி விக்கி அழுது கொண்டு பாடல் நின்றது கூடத் தெரியாமல் விக்கித்து நிற்பதும் உண்டு....அத்தகைய பாடல்களைப் பகிர முடிந்த வரைத் தவிர்ப்பதும் உண்டு....ஆனால் அதையும் மீறி சில பாடல்கள் எப்படி ஒரு தாக்கத்தை மற்றவர்களிடம் ஏற்படுத்துகிறது என்பதை அறிய விழைந்ததே இந்தப் பகிர்வு...பேதாஸ் பாடல்கள் எல்லோரும் தான் பாடுகிறார்கள்.....சிலர் பாடும் போதுதான் நாம் வலியை உணர்வோம்...நமக்கே வந்தது போல் துடிப்போம்....காட்சியும் அத்துடன் இணையும் கலைஞர்களின் பங்களிப்பும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்....வரிகள் வலிகளை நெஞ்சில் ஆணி அடிக்க வேண்டும்...இசை இதயத்தைப் பிளக்க வேண்டும்...காட்சி எப்போது நினைத்தாலும் கண் முன்னே விரிய வேண்டும்...பாடியவர் நம்முள்ளே அந்த சோகத்தை ஆழ உழுது விதைக்க வேண்டும்...இப்படி சில பாடல்கள் இருக்கிறது.அதில் ஒன்று இன்றைய பகிர்வு...1962 இல் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் திரை உலகில் ஒரு திருப்பு முனை....படம் முழுவதுமே ஒரு ஆஸ்பத்திரியில் படமாக்கப் பட்டிருக்கும்.வெகு குறுகிய காலத்தில் படமாக்கப் பட்ட படம்...திரை உலகுக்கு நாகேஷ் என்ற பொக்கிஷக் கலைஞனை அறிமுகம் செய்த படம்...சினிமோடோக்ராபியில் சாதனை செய்த கருப்பு வெள்ளைக் காவியம்...பாடல் சொன்னது நீதானா....சொல் சொல் சொல் என்னுயிரே"..

ஒரு முக்கோணக் காதல் கதை...தேவிகாவும் கல்யாணகுமாரும் முன்னாள் காதலர்கள்.காதல் நிறைவேறவில்லை.தேவிகா பணக்கார முத்துராமனை மணக்கிறார்.முத்துராமனுக்குப புற்று நோய்.கல்யாண குமார் பெரிய புற்று நோய் மருத்துவர்.அவர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் முத்துராமன் தம்பதியர்.சீதா(தேவிகா)வின் பழைய காதல் வேணுவுக்குத்(முத்துராமன்) தெரிய வர தான் இறந்து போனால் சீதா முரளி(கல்யாணகுமாரை)மணக்கும்படி வேண்டுகிறான்....காதில் இரும்பைக் காய்ச்சி ஊற்றியது போல் இருக்கிறது சீதாவுக்கு.....அவளின் வெடிப்பு,கதறல் இந்தப் பாடல்..காலத்தை வென்ற பாடல் என்று சொல்வதை விட காலத்திற்கும் நிற்கும் பாடல் என்று சொல்வதே சிறந்தது....பாடலின் வரிகள் யதார்த்தமான சோகம்...கவியரசர்.இசை மெல்லிசை மன்னர்கள்.பாடல் முழுவதும் சிதார்,தபலாவின் ஆக்கிரமிப்பு...தேவிகாவின் சோகத்திலும் சுகமான முகம்....முத்துராமனின் வெறுமை பார்வையில்....சிகரம் காமெரா.....அது நுழையாத இடமே இல்லை...ஜன்னல்,கதவு,கட்டில் மேல் அடியில்......கட்டிலின் அடி வழியாக தேவிகா.....இன்று வரை வியந்து கொண்டே.....வின்சென்ட் சாரையும் ஸ்ரீதரையும் நெஞ்சம் மறப்பதில்லை...

"சொன்னது நீதானா".....ஒரு இழையோடும் சோகத்துடன் துளைக்கும் கேள்வி...'சொன்னது நீதானா....'.தானாவில் 'ஒரு கனம்.சொல் சொல் சொல் என்னுயிரே......உயிரே இதில் ஊசலாடும் உயிர்....சொல் சொல் சொல்....ஒவ்வொரு சொல்லிலும் ஒரு கமகம்.....அது மணக்கும் எப்போதும்...

"சம்மதம் தானா? ஏன் ஏன் ஏன் என்னுயிரே ...."அப்படியே நம்மைப் பிழியும் கேள்விக் கணைகள்....உயிரைக் கவ்விப் பிடித்துக் கொண்டு என்பது இது தானோ...?

சொன்னது நீதானா முதலில் பாடி சித்தாரில் சுருதி சேர்க்கும் ஒரு இடைவெளி....சிதார் விளையாடித் தான் இருக்க்றது...தேவிகாவின் முகபாவம் ஒரு டிக்ஷணரி....சொன்னது நீதானா என்று ஆரம்பிக்கும் குரல் போகப் போக ஏறிக்கொண்டே போகும் நேர்த்தி.....இசையமைப்பாளர்,சுசீலாம்மாவின் திறமைக்கு ஒரு சான்று...

சரணம் ஆரம்பிக்கும் ஸ்தாயி இவரைத்தவிர வேர் யாராலும் பாட முடியாத ஒன்று....காட்சியின் உச்சத்தை இப்படித்தான் உணர்த்த முடியும் என்று ..

இன்னொரு கைகளிலே ..யார் யார் நானா???..கதறி இருப்பார் இங்கு....நானாவில் ஒரு துளைக்கும் சோகம்...

"மங்கல மாலைக் குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானா?

மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே..

என் மனதில் உன் மனதை இணைத்தது நீதானே..

இறுதி வரைத் துணை இருப்பேன் என்பது நீதானே"...சொன்னது நீதானா

அவன் சொன்ன வார்த்தை அவளை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது......அதைக் குரலில் இப்படித்தான் காட்டமுடியும் என்று சுசீலாம்மாவும்....முகத்தில் இப்படித்தான் காட்டவேண்டும் என்று தேவிகாவும் உணர்த்தி இருப்பார்கள்.

மறுமணம் என்பது அந்தக் காலத்தில் ஏற்கப் படாத ஒன்று...அதிலும் கணவன் வாயால் ஒரு மனைவிக் கேட்க விரும்பாத சொல்.....அதனால் தானோ என்னவோ இத்தனை "சொல் சொல் சொல்...."கவியரசருக்கு சொல்லை ஆள்வது எப்படி என்று சொல்லியா தர வேண்டும்..'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை....'சொல்லத்தான் நினைக்கிறேன்...சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா?'..இது போல பல சொல் .....

அடுத்த சரணம் ஒரே உணர்சிக் கொந்தளிப்பு...சென்டி...என்று இந்தக் கால இளசுகள் எவ்வளவு கேலி பேசினாலும்....இதன் வலிமை ஒரு முழு திரைப்படத்தால் கூட உணர்த்த முடியாது..

"தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?

தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கைப்படலாமா

ஒரு கோடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா

ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?

இன்னொரு கைகளிலே....."பாடல் அந்தரத்தில் ....

ஒவ்வொரு வரியும் அவனுக்கு சாட்டையடியாய் விழுகிறது....

உயிரோடு உயிராய்க் கலந்த திருமண பந்தத்தில் இப்படி ஒரு வார்த்தை சொல்ல எப்படி மனசு வந்தது என்று சாதாரணமாய்க் கேட்டிருந்தால் அந்த வசனம் மறக்கப் பட்டிருக்கும்...அதே பாடலில் சுசிலாம்மா குரலில் வரிக்கு வரி இழையோடும் துக்கத்தை இசையோடு இணைத்து....குரலில் வலியைக் குழைத்து....முகத்தில் வேதனையை சார்த்தி....கையில் உள்ள சிதார் நரம்புகளை நடுக்கத்தில் மீட்டி....தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமா?...இந்த வரிகள் பாடும் பொழுது தேவிகாவின் கண்களில் குளம் கட்டும் கண்ணீர்...விரல்களில் நடுக்கம் சித்தாரில் பரவ....இதை இரண்டையும் தன் குரலிலேயே கொண்டு வந்திருக்கும் சுசீலாம்மா.....கண்கள் முழுக்க நீருடனும் நெஞ்சு நிறைய கனத்துடன் நாமும்....

ஒருவனை மணந்து திருமணமாலை சூடிய பெண்ணை மறுமணம் செய்து கொள்ளச் சொல்வது..ஆண்டவன் கழுத்தில் உள்ள மாலையை கால் மிதி படும் தெருவில் எறிவதற்கு சமம்....அதைவிடக்

கொடியது இன்னொருவனை மணந்து கொள்ளச் சொன்னது....பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு கொடியில் ஒரு முறை மலர்ந்து மண்ணாகும் மலர் போன்றது.கணவன் ஒருவனைத் தவிர வேரு ஒருவனை மனத்தாலும் கூட உறவாட நினைக்காத பத்தினி இனமல்லவா இவள்...இந்த ஒவ்வொரு வரிகளையும் ஒரு காவியமாக்கி இருப்பார் தன் குரலால் சுசீலாம்மா.....சுசீலாம்மாவின் சோகப் பாடல்களை வரிசைப் படுத்தச் சொன்னால் முதலிடத்திற்குப் பலர் தெரிவு செய்யும் பாடல் இதுவாகத் தான் இருக்கும்....அவர் பாடல்களை வரிசைப் படுத்துவது கடினம் என்பதால் இதை ஒரு சாதனைப் பாடல் என்றே சொல்லித் தொடர்ந்து செல்லவேண்டியதுதான்...

ஜோன்புரி ராகச் சாயல் பாடலில்......பாடி இருக்கும் விதம் வாணியின் வீணை சாயலில்.....தேவிகாவின் முகபாவம் சோக சித்தரமாய்......இந்தப் பாடல் பற்றி ஒரு தீசிசே எழுதலாம் என்பது என் கருத்து.....கண்ணுக்கும் கருத்துக்கும் செவிக்கும் அமுது படைக்கும் பாடல் என்றென்றும்....உங்களுடன்...https://www.youtube.com/watch?v=4WGVo1Zh3Yw......