Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...55.

சுசீலாம்மாவின் பாடலைத் தொடர்ந்தே சென்று கொண்டிருந்த நான் சில பாடல்களில் அங்கேயே சில நாள் நின்று விடுவதும் உண்டு.அப்படிப்பட்ட ஒரு மயக்கும் பாடலே இன்றைய பதிவு.

இனி வரும் சந்ததியர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதத் திரைப்படம் பந்துலு மாமாவின் "கர்ணன்"...மறு பதிப்பின் இந்தப் படத்தி வெற்றி அனைவரும் அறிந்ததே...படத்தின் வெற்றிக்குக் காரணம் பிரும்மாண்டம்,நடிகர் திலகம்,மற்ற நட்சத்திரங்கள் இவர்களுடன், மெல்லிசை மன்னர்களின் இசையும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது...அப்படி ஒரு டீம் வொர்க் வெற்றி அது.

பிறப்பின் ரகசியம் அறியாத கர்ணனைத் தேரோட்டி ஒருவன் எடுத்து வளர்க்க இளமைக் காலத்தில் ஒவ்வொரு இடத்திலும் குலத்தைக் காட்டி இழிவு செய்யப்படுகிறான்....துரியோதனனால் அங்க நாட்டுக்கு அதிபதியாகி சுபாங்கியை மணம் புரிகிறான்.அவனுக்கு அன்று முதல் இரவு....அந்த குணவதி,கலங்கிய மன நிலையில் இருக்கும் கணவனை ஆறுதல் படுத்தி அவனை அவனுக்கு உணர்த்தும் ஒரு ஊக்கப் பாடல்...கர்ணனின் வெற்றிக்குப் பின்னால் சுபாங்கிக்கும் ஒரு பங்குண்டு...சுபாங்கியாக தேவிகா வாழ்ந்திருப்பார்....ஒரு பாந்தமான,பெண்மையின் இலக்கணமானத் தோற்றத்திற்கு இவரை தாராளமாகச் சொல்லலாம்...அமரிக்கையான பெண்...அழகி...

தன் குலத்தைப் பற்றிப் பேசிக் கண்கலங்கும் கர்ணனை தேற்றும் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பவர் சுசீலாம்மா....வேறு யாராலும் பாட முடியாத(தயவு செய்து பாடக் கூடாத)பாடல்களில் இதுவும் ஒன்று...ஒவ்வொரு சங்கதியும் ஒரு கட்டுரை.....இலக்கணம்...அப்படி ஒரு சுத்தமான சங்கதிகள்....

ஆரம்பமே ஒரு அமைதியான ஆரம்பம்.."கண்ணுக்கு குலமேது....."சாந்தமான ஆரம்பம்...கண்ணா..கருணைக்கு இனமேது...."வரிகள் கவியரசர்.எளிமையே இனிமையாய்...பாமரனும் புரிந்து கொள்ளும் உவமைகள்.மனிதப் பிறவிக்குப் பார்வை மிக முக்கியம்....அந்தப் பார்வைக்கு குலம் இல்லை...அதே போல கருணை...இந்தக் கருணைக்கும் இனம்,குலம் இல்லை....பரந்த ஆகாயத்தைப் பிரிக்க முடியாத மேகக் குவியல்கள்...இதை"விண்ணுக்குள் பிரிவேது"....கண்ணா...விளக்குக்கு இருளேது....இருளைக் கிழித்து ஒளி தரும் விளக்குக்கு இருள் உண்டோ....அது போல நீ ஒரு மாவீரன்...வள்ளல்,நல்லவன்,....நீயே குலம் பற்றி வருந்தலாமா????என்ன ஒரு அழகான வரிகள்...புது மனைவி இப்படி சொல்லி வாழ்க்கையைத் தொடங்கினால் அவளை விட அவனுக்குப் பெரிய சொத்து வேறு எதுவாக இருக்க முடியும்?

இனிமேல் வரும் சரணங்களில் வரிகளின் அழகுக்கு இனிமை சேர்த்திருப்பார் சுசீலாம்மா...

"பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா,பரம் பொருள் கண்டே உயிர் பிறக்கும்,வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்,அதில் மேல் என்றும் கீழென்றும் எங்கிருக்கும்?"...வரிகளின் பொருள் உள்ளங்கை நெல்லிக்கனி....

இனிமையின் பக்கம் செல்வோம்...பாலினில் இருந்தே.....தொடரும் ஒரு மேஜிக் அகாரம்....சத்தியமா யாராலும் முயன்று பார்க்கத் துணிவில்லாத தேனூற்று..ஆ ஆ ஆ ஆ ....அது முடியும் இடம் சொர்கம்...சொர்கம்...

இந்தப் பாடல் முழுவதும் அம்மாவோடு இணைந்து இழையும் குழல்...அதற்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் அம்மாவின் குரல்....மேல் என்றும்....அந்த மேல்......ஆஹா....கீழென்றும்....அதில் ஒரு இறக்கம்...நழுவி,தழுவி இரங்கும் இறக்கம்....

"கொடுப்பவர் எல்லாம் .......தேனருவி

மேலாவர்..கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்..

தருபவன் இல்லையோ கர்ணா நீ..

தர்மத்தின் தாயே கலங்காதே"

அவனை அவனுக்கு உணர்த்தும் வைர வரிகள்....

நீ சாதாரண மன்னன் மட்டுமா?வள்ளலுக்கெல்லாம் வள்ளலாக இந்தப் பெண்மை அவனின் வள்ளன்மையைப் பற்றி அப்படி உயர்வாக சொல்லிக், கொடுக்கும் வள்ளல் நீ என்றும் மேலானவன்...உன்னிடம் கையேந்தி வாங்குபவர்கள் எல்லோரும் கீழானவர்கள்...தருபவனான நீ சாமான்யனா...தர்மத்தின் தாயே கலங்காதே....எப்படி ஒரு உயர்ந்த இடம் அவனுக்கு.....தர்மதேவதையே அவனுருவில் மண்ணுக்கு வந்திருப்பதாய்ச் சொல்லித் தேற்றுகிறாள்....

கலங்காதே.....ஏ..ஏ....அதில் விழுந்தவள் தான் நான் ...எழ வெகு நாளாயிற்று.....

உயர்ந்த பாடல்,அருமையான வரிகள்,சிந்தை மயக்கும் இசை.....பாடலுக்கு உயிர் கொடுத்து ,காட்சிக்கு அழகு சேர்த்திருக்கும் தேவிகா,நடிகர் திலகம்.....மகுடத்தில் வைரம் பதித்த மாதிரி சுசீலாம்மாவின் பாடல் செழுமை...இனிமை,மென்மை,மேன்மை.....தனித் தன்மை....மறக்க முடியாத பாடல்....

"கண்ணுக்கு குலமேது...கண்ணா...கருணைக்கு இனமேது....விண்ணுக்குள் பிரிவேது...விளக்குக்குள் இருளேது?????பஹாடி ராகத்தில் பிழிந்து எடுத்து சுசீலாம்மாவின் தேன் குரலில் குழைத்து எடுத்து நடிகர் திலகத்தின் கண்களுக்குள் ரத்த சிவப்பேற்றி மெய் சிலிரிக்க வைக்கும் பாடல்....கண்ணதாசன் எங்கிற கவியரசன் வரிகள் தர...மெல்லிசை மன்னர்களின் இசையில்..கர்ணனின் பெருமையை அவனுக்கே உணர்த்தி உயர்திக் காட்டும் பாடல்....எத்தனை காலமானாலும் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே...இரவு...பல நினைவுகளை எழுப்பி அசத்தும் போது மெல்லிய மயிலிறகால் அம்மாவின் தலை முடி கோதும் கையின் சுகத்தோடு வரும் பாசத்தென்றலை வீசி செல்லும் பழைய ராகம் உங்களுடன். .http://www.youtube.com/watch?v=lSrFQtH0OCM..