Visali Sriram

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...27.

இன்றைய பகிர்வு ஒரு அருமையான,மென்மையான காதல் பாடல்...கவியரசர்,மெல்லிசைமன்னர்கள்,இசையரசியின் இசை சங்கமம்.1961 இல் பீம்சிங் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த பாவமன்னிப்பு திரைப்படப் பாடல்....அத்தான்...என்னத்தான்...ஹரிகாம்போதி ராக சாயலோடு...ஆரம்பமே ஒரு அழகான வயலின்...தொடரும் அக்கார்டின்.....பாடல் முழுக்க ஒரு இதமான மிதமான ரிதம்...முழுக்க முழுக்க பாடலை ஆட்சி செய்திருக்கும் இசையரசிக்கு மெல்லிசைமன்னர் செய்திருக்கும் மரியாதை.....

அத்தான்...என்னத்தான்...ஏழு வயதில் இந்தப் பாடலுக்கு விழுந்தவள் இன்றுவரை இதற்கு அடிமை...அதற்கு முன்னும் பின்னும் எல்லாப் பாடல்களுமே சிறப்பானவைதான் என்றாலும்...இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த இதயம் தொட்ட பாடல்...

.அப்போது அத்தான் என்றால் அர்த்தம் எல்லாம் தெரியாது ஆனாலும் இந்தப் பாடல் கேட்கும் போது யாரோ என்னை ஊஞ்சலில் வைத்து மெல்ல ஆட்டிவிடுவது போல ஒரு சுகம்....அப்போது வரியில் லயிப்பு இல்லை...அந்தக் குரலில் ஒரு மயக்கம்....ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் இந்தப் பாடல் மட்டும் கேட்க தவறினதே இல்லை...

அப்போது இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான பாடல் இது...

.கொஞ்சம் வளர்ந்து விபரம் தெரியும் போது பாடல் கேட்கும்போதே எங்கிருந்தோ ஒரு நாணம் மெல்லக் கவ்விக்கொள்ளும்....உபயம் கவியரசர்...

.கல்லைத்தான்...மண்ணைத்தான் காய்ச்சித்தான் ....இதிலிருந்து ஒரு மனிதருக்கு இப்படி ஒரு மென்மையான பாடல் புனையத் தூண்டியது எதுவோ நானறியேன்...

.அத்தான் ,நகரத்தார் மத்தியில் ஒரு சொல்வழக்கு....அயித்தான்...அதை அத்தானாக்கி...

அதற்கு மெல்லிசை மன்னர்கள் பக்கவாத்தியங்கள் ஒரு பக்கத்தில் மெல்ல ஒதுக்கி,,முழு பொறுப்பையும் சுசீலாம்மாவிடம் கொடுத்து...ஹூம்....உன் ராஜ்ஜியம் நடத்து என்று தள்ளி நிற்க.

.தேனும்,ேன்பாகும்,கற்கண்டும்,சர்க்கரையும் சொரிந்து தள்ளி இருப்பார்கள் அம்மா....ஒரு ஒரு தான் ஒரு ஒரு மாதிரி.....அது என்ன குழைவு...என்ன திருத்தம்....என்ன இனிமை....எப்படி சொல்வேனடி.....டி......ஐயோ.....அது என்னடியோ??படிப் படியாக ஏறிக்கொண்டே போகும் இனிமை டி அது....

ஏனத்தான்,என்னைப் பாரத்தான்...தான்...அங்கே ஒரு சுழி..கேளத்தான்....தானிலே ஒரு அலை....துடித்தான் அணைத்தான்.....தான்...தான்தான்....இணைத்தான்,வளைத்தான்,சிரித்தான் அணைத்தான்....இனிமேல் தான் வைத்து வார்த்தைகளே இல்லை என்கிற மாதிரி எல்லா தானும் கொட்டித் தள்ளி இருப்பார் கவியரசர்....

பெண்களை வர்ணிக்கலாம்...ஆனால் அவர்களின் உணர்வுகளை இவ்வளவு துல்லியமாக,கண்ணியமாக ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணுக்கு சொல்லும்படியாக இனிமேல் யாராலும் எழுதவும் முடியாது,அதற்கு ஒரு வார்த்தையின் பொருள் கூட சிதையாமல் இசையமைக்கவும் முடியாது,அதை இப்படி லாவகமாக ,மென்மையிலும்,மென்மையாக சுசீலாம்மாவைப் போல் யாராலும் பாடவும் முடியாது....

ஏகப்பட்ட வாத்தியங்களை ஓசையிட வைத்து,அதற்கு மேலே பல்லை உடைக்கும் கரடு முரடான வரிகளைப் போட்டு,பாடுபவர்கள் அதற்கு மேல் கத்தி....இதெல்லாம் எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு அஹிம்சைப் பாடலை இனிமேல் நம்மால் கேட்கமுடியுமா?சந்தேகம்தான்....

சாவித்திரி அம்மாவும்,தேவிகாவும் இந்த காட்சியில் வாழ்ந்திருப்பார்கள்.....மென்மை.....பெண்மை...மேன்மை.....

ஜேசுதாஸ் அவர்கள் ஒருமுறை இந்தப் பாடலைப் பற்றி ஒரு மேடையில் சிலாகித்து சொன்னது நினைவிற்கு வருகிறது....அணு அணுவாக இந்தப் பாடலை அவர் எப்படி ரசித்திருக்கிறார் என்று சொன்னது கேட்டு புல்லரித்துப் போனது எனக்கு..

..ஒரு குரல் ஐம்பத்தி மூன்று வருடங்களாக என்னை உள்ளிருந்து ஆள்கிறது என்றால் அது இந்தக் குயிலின் குரல்தான்,அந்தப் படலை அந்த இசையரசிக்கே சமர்ப்பணம் செய்கிறேன் .....பாடல் இதோ உங்களுடன்....http://www.youtube.com/watch?v=VCgOiHU0aDw