Visali Sriram

 பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...13.

இன்று.. ஒரு ஊக்கப்பாடல்...நான் ஒவ்வொரு முறையும் சோர்ந்து இனிமேல் கீழே போனால் தரை தட்டும் என்று தளர்ந்த நிலையில் என்னை அமானுஷ்யமாக முடியைப் பிடித்து தூக்கி நிறுத்திய,நிறுத்திக் கொண்டிருக்கும் ஒரு டானிக் பாடல்...

கவியரசர்தான் வேறு யாரு....அவர் வரிகளில்,மெல்லிசை மன்னர் இசையமைப்பில் சுசீலாம்மா பாடிய "காலமகள் கண்திறப்பாள்"

பாசிடிவ் எண்ணங்களை ஆன்மீகத்தோடு இணைத்து இதைவிட வேறு யாராலும் சொல்ல முடியாத பாடல்.சோகத்தைப் பிழிந்து எடுக்கும் சுபபந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல்.நமக்கும் ஒரு வழி இருக்கிறது...அது என்ன என்று தெரியவில்லை...ஆனால் உண்டு...இப்படி ஒரு பாடல்...

ஆனந்த ஜோதி திரைப் படத்தில் அக்கா தேவிகா,குட்டித்தம்பி கமலஹாசனுக்குக்காகப் பாடும் பாடல்.தேவிகாவின் எளிமையான அழகையும்,விளையும் பயிர் முளையிலே தெரியும் கமலின் முகபாவங்களையும் சொல்லுவதை விட காணொளியில் கண்டு களிக்க வேண்டுகிறேன்.

புலிக்கு பயந்து மரத்து மேலே ஏறின மாதிரி ஒரு நிலை...அப்போதும் அவள் உறுதி இழக்கவில்லை....கூட இருக்கும் சிறுவன் குழந்தை...அவனுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஒவ்வொரு மானுடனுக்கும் ஆறுதல்...நம்பிக்கை தரும் பாடல்..."நாலு பக்கம் வாசல் உண்டு சின்னைய்யா....அதில் நமக்கும் ஒரு வழியில்லையா சொல்லய்யா?சின்னையாவில் ஒரு அழுத்தமான சங்கதி....அது சொல்லும் சங்கதி அபாரம்...

சின்ன சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா...ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா....துணிந்தவனுக்கு துக்கமில்லை...என்னதான் ஆகும் ஆகட்டுமே.... என்ன ஒரு தன்னம்பிக்கை....

இங்கு சுசீலாம்மாவைப் பற்றி ஒன்று சொல்லியே ஆகவேண்டும்....சின்ன...எண்ண...இந்த ன,ண.....இது அவர்கள் சொல்லும் அழகை கவனித்துப் பாருங்கள்....தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்....அவர் குரலில் இங்கு!

ஒரு பொழுதில் துன்பம் வரும்...மறுபொழுதில் இன்பம் வரும்...இருளிலே ஒளிபிறக்கும்..ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஒரு கோடி நம்பிக்கை.....

இனி ஆத்திகம் பேசுகிறார் கவியரசர்.....கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்...கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருக்கும் தெய்வம்....நெல்லுக்குள்ளே மணியும்,நெருப்புக்குள்ளே ஒளியும் உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா தம்பி நமக்கும் இல்லையா?(கோழிக்குள் முட்டை வைத்து,முட்டைக்குள் கோழி வைத்து)....இந்த இறை சூட்சுமத்தை மிக எளிய முறையில் இவரைத் தவிர யாராவது சொல்லி இருக்கிறார்களா????தேடிக் கொண்டிருக்கிறேன்....

பாடல் முழுவதுமே ஒரு சோகம் கவ்வியிருந்தாலும் ஒவ்வொரு வரி முடிவிலும் இல்லையா??என்று குரலாலே ஒரு நம்பிக்கை ஊட்டும் அம்மாவின் அந்தக் குரலையும்.....அந்த ஹம்மிங்கும்....இறுதியில் உறங்க வைக்கும் அந்த ஆஹாவும்.......ஆஹா....:)பாடல் உங்களுடன்....