பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...12.
ஒரு பெண்ணின் நிறைவு.....மாலை சூடும் மணநாள்.
திருமண நாள் இதன் அர்த்தம் இப்போது பகட்டு,ஆரவாரம்,ஆடம்பரம்...
இந்த நிலையில் என்னுடைய இந்தப் பதிவு பத்தாம்பசலி பதிவாக இருக்கலாம்....என்னை பொறுத்தவரை இது ஒரு காவியப் பாடல்.
நிச்சயதாம்பூலம் படத்தில் கவியரசரின் தீர்கமான,தீட்சண்யமான வரிகளுக்கு மெல்லிசை மன்னர்களின் திருத்தமான தீர்மானமான இசையமைப்பில் சுசீலாம்மாவின் தித்திக்கும் தேன்குரலில் ஒலிக்கும் தீந்தமிழ்ப் பாடல்..
திருமணநாள் என்றால் இப்போது நட்சத்திர ஹோட்டலில் நட்புடன் விருந்து,வைரநகை(அதை ஒளித்து வைத்து கொடுக்கணுமாம்)புடவை...சிலர் கார் சாவி....இப்படி எதிர் பார்ப்பு நஞ்சை நெஞ்சில் நட்டுக்கொண்டிருக்கும் காலத்தில்...
இந்தப் பாடல் ஒரு பாடம்..அவன் நேரம் சரியில்லை...அன்று திருமணநாள்...அவளுக்கு எதுவும் கொடுக்க முடியவில்லையே என்று அவன் புழுங்க...ஆதுரத்துடன் அவன் கரம் பற்றி...கோடி அன்போடு மாலை சூடும் மணநாள்,இளமங்கையின் வாழ்வில் திருநாள்...சுகம் மேவிடும் காதலின் எல்லை.....
இந்த எல்லையில் தான் அந்த கோடி அன்பும் கொட்டி பாடி இருப்பார்கள்...அது ஒரு பொடி சங்கதி...அதற்குள் கோடி சங்கதிகள்...அர்த்தங்கள்....நிறைவு...இதற்கு மேல் எதுவுமே இல்லை....இதுதான் அல்டிமேட்....என்று பொருளுரைக்கும் இல்லை...எல்லையில் இனிமையும்...இல்லையில் உறுதியும் கொப்பளிக்கும் அங்கே
தொடரும் குழலோசை...மெல்லிசை மன்னர் அநேகமாக சுசீலாம்மா தனிப் பாடல் என்றால் குழல்,சிதார்,தபலா..இந்த மாதிரி மூன்று இல்லை நான்கு வாத்தியங்களைத்தான் களமிறக்குவார் போலும்....இனிமைக்கு இரைச்சல் இடைஞ்சல் என்றோ?
ஆ ஆ ஆ...இந்த அகாரத்துக்கு என்ன சொல்வது...
நடிப்பு கற்றுக்கொடுப்பதற்கு ஒரு பல்கலைகழகத்தில் நடிகர்திலகம் எப்படி ஒரு பேராசிரியரோ,கருத்துக் களஞ்சியமோ,அது மாதிரி பாடல் பாடுவதற்கு சுசீலாம்மா ஒரு நூலகம்..
கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு அசுர சாதகம் செய்தாலும் இந்த சுகம் சாரீரத்தில் வருமா?சந்தேகம்தான்....தந்திகளின் இனிமைத்துணையோடு..."காதல் கார்த்திகைத் திருநாள் மனம் கனிந்தோம் மார்கழித் திருநாள்...சேர்ந்தது பங்குனித் திருநாள்...நாம் சிரிக்கும் நாளே மணநாள்....இது....சிரிப்பு...இதுதான் ஹைலைட்..
எத்தனையோ பரிசுகளை வாங்கிக் கொடுத்திருப்பான் கணவன்....ஒரு உப்பு சப்பு பெறாத விஷயத்தை ஊதிப் பெரிசாக்கி...முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவன் நெஞ்சிலே முள்.தைக்கும் காரிகையரே....சிரியுங்கள்....அந்த சிரிப்பு முத்துக்களை அவன் கோர்த்து மாலையாக்கி அணிவிக்கட்டும்....அதைவிட வேறு என்ன வேண்டும் இல்லறத்தில்???
நிறைவு....எதில் நிறைவு....மங்கலக் குங்குமம் போதும்..திருமலரும் மனமும் போதும்,பொங்கிடும் புன்னகை போதும்.....அவன் இருக்கும் வரைதான் இதெல்லாம் மணக்கும்...அவன் நன்றாக இருக்கணும்...பொங்கிடும் புன்னகை போதும்...மனம் புதுமணத் திருநாள் காணும்.....எத்தனாவது திருமண நாளானாலும் அவன் நன்றாக இருந்து...பொங்கும் இன்பம் எங்கும் தங்கினால் அதுதான் உண்மையான தாம்பத்தியம்....அர்த்தமான திருமணநாள்....
.பாடல் நிறைவில் சுசீலாம்மாவின் பாடலுக்கு பேஸ் ,மெல்லிசை மன்னர் பாடலை ஹம்மிங் செய்திருப்பார்....ஒரு பூரண...சந்தோஷ திருநாள் பாடல்...உங்களுடன்......